Ticker

6/recent/ticker-posts

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

 முதல் ஆட்டத்தில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை 


ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 06 வது தடவையாக நடைபெறவுள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆடவர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ளது.





குறித்த தொடரானது முதற் தடவையாக T20 போட்டிகள் வடிவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 05 டெஸ்ட் விளையாடும் நாடுகளின் A அணிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அணிகள் பங்கேற்கின்றன.



இத்தொடரில் பங்கேற்கும் 08 அணிகளும் 02 குழுக்களாக பிரிக்கப்படுவதுடன், குழுநிலையில் முதல் 02 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இதில் 2024 ஒக்டோபர் 25 ஆம் திகதி அரையிறுதிப் போட்டியும், 2024 ஒக்டோபர் 27 ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. 



இதன்படி, குழு A இல் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் குழு B இல் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதனிடையே, இம்முறை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் நாளன்று 02 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் நாளின் 02 வது போட்டியில் இலங்கை தங்களது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது. 





இலங்கை அணியானது 2024 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள 02 வது லீக் போட்டியில் ஹொங்கொங் அணியையும், ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள 03 வது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளது.



2013 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் இந்திய அணியைத் தோற்கடித்து 02 வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே 02 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.





Post a Comment

0 Comments