Ticker

6/recent/ticker-posts

அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆங்கிலம் தெரியுமா?

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் இடம் பெற்று  வந்த காலப் பிரிவின் போது, ஒரு  சிலர் சிங்கள சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைத்து வந்த கேள்வி 'அநுர குமாரவுக்கு ஆங்கிலம் தெரியுமா'? என்பதுதான். அதாவது,  'ஆங்கிலம் தெரியாத ஒருவர் இலங்கையில் எப்படி ஜனாதிபதியாக  வர  முடியும்?' என்பது அவர்கள் எழுப்பியிருந்த மறைமுகமான கேள்வியாக காணப்பட்டது.

இது இலங்கை மத்திய தர வர்க்கத்தினரின் நனவிலி மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒரு தாழ்வுச்சிக்கலின் வெளிப்பாடுமாகும். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இதனையொத்த ஒரு  கருத்தைத் தெரிவித்திருக்கிறார் (அவர்  பேசியிருக்கும் தொனி  அநுர குமார திசாநாயக்கவின்  எழுச்சி அவரை ஒருவித மனக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதைக் காட்டுகின்றது).

கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த ஒரு நாடு என்ற முறையில் காலனித்துவ கலாசாரத்தின் செல்வாக்குக்கு எம்மை  அறியாமலேயே நாங்கள் அடிமையாகியிருக்கின்றோம். அதன் பாதிப்பிலேயே மேலே குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த கேள்விகள் எழுகின்றன.

இந்த அடிமை மனப்பான்மையும்,  தாழ்வுச் சிக்கலுமே 'தம்புத்தேகம' ஏழை சிங்கள விவசாயி ஒருவரின் மகன் நாட்டின்  ஜனாதிபதி கதிரையில்  அமருவதை சகித்துக் கொள்ள  முடியாத ஒருவித மனச் சிதைவை உருவாக்குகின்றன.

1980 காலப்பகுதிகளில் இலங்கை மக்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ஒரு  நிகழ்ச்சி 'Mind Your Language' என்பது. இந்தியர்கள் பேசுவதற்கு முயலும் கொச்சை ஆங்கிலத்தை கேலி செய்து, நம்மைச் சிரிக்க வைத்த நிகழ்ச்சி. 'எங்களையே நாங்கள்  இழிவுபடுத்திக் கொள்ளும் ஒரு முயற்சி' என்ற விதத்தில் அப்பொழுது  'Lanka Guardian'  சஞ்சிகை இதனைக் கடுமையாக விமர்சித்து' ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

சிங்கள ஜனரஞ்சக பேச்சு வழக்கில் ஆங்கில மொழியை 'கடுவ' (வாள்) என்றே சொல்வார்கள்.  'வாள்' என்பது  அதிகாரத்தின் குறியீடு - அதனை கையிலெடுப்பவர் பலம் பொருந்தியவராக இருந்து வருவார் என்பதே இதன் பொருளாகும்.

1950 களின் பிற்பகுதியில்  முதற் தடவையாக தாய் மொழி மூலமாக H S C பரீட்சை  எழுதி  பேராதனை  பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த மாணவர்களே இச்சொற்களை  புழக்கத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். நகர்ப்புற கல்லூரிகளில் ஆங்கில மொழி  மூலம் படித்து பல்கலைக்கழகம் வந்திருந்த மாணவர்களை குறிப்பதற்காக அவர்கள் 'குல்டூர்' என்ற சொல்லைப்  பயன்படுத்தினார்கள். ஓர் எதிர்மறை தொனியில் பயன்படுத்தப்பட்ட 'Cultured' (பண்பட்டவர்கள்) என்ற சொல்லிலிருந்தே அது வந்திருக்க வேண்டும்.

சமூக வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட இப்பனிப் போர்  இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் இன்னமும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. (ஒடுக்கப்பட்ட சமூக வர்க்கங்களின் நலன்களை பிரதிநிதித்துவம்  செய்வதாக கருதப்படும்).  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அந்தரே) இந்த உள - சமூகவியல் காரணிகளின் அடிப்படையில் 'ராக்கிங்' (Racking) என்ற பகிடிவதைக்கு (மறைமுகமாக) தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.

பல இலட்சக்கணக்கான இலங்கையர்கள் வானொலியில் கேட்டும், தொலைக்காட்சியில் பார்த்தும் தம்மை  மறந்து  சிரித்த  சமுவேல் / அனெஸ்லி / பேர்ட்டி  மும்மூர்த்திகளின் நகைச்சுவை நிகழ்ச்சிகள்  இந்த  மனோபாவத்திற்கான மற்றுமொரு  உதாரணமாகும். 1970 களின் தொடக்கம் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் சிங்கள  வெகுஜன  நகைச்சுவையின்  'Contents ' இல் செல்வாக்குச் செலுத்தியவர்கள் இவர்கள். அவர்களுடைய பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஆங்கிலம் பேச  முடியாதவர்கள் மூக்குடைபட்டு,  பெரும்  சங்கடத்துக்குள்ளாகும் காட்சிளைக் கொண்டவை. (உதாரணம்: மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்துச் சிரித்த வெள்ளைக்காரனுக்கு அப்பம்  சுடுவதற்கு ஆள் எடுப்பதற்கென்றிம்  நடாத்தப்படும் நேர்முகப் பரீட்சை).

சரி, அவ்விதம் ஆங்கிலம் தெரியாதிருப்பது ஒரு பெரும் குறைபாடு என்று வாதிடுபவர்களுக்கு நன்கு ஆங்கிலப்  புலமை  கொண்டிருந்த  இலங்கையின் கடந்த கால அரச தலைவர்களின் சாதனைகள் சிலவற்றையும் நினையூட்ட  வேண்டியிருக்கிறது. 

1956 - 1959 காலப் பிரிவில் பிரதம மந்திரியாக இருந்து வந்த பண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Oxford University) படித்தவர்.  20 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் உருவாகிய தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர்களில் ஒருவர் இவர்.

ஆனால், அவர் தனது ஆட்சிக் காலத்தின் போது மேற்கொண்ட ஒரு சில தூரநோக்கற்ற முடிவுகள் மற்றும் தமிழர்களுக்கெதிரான 1956, 1958 வன்முறைச் சம்பவங்கள் என்பன அடுத்து வந்த  50 ஆண்டுகளில் இலங்கை வரலாற்றின் செல்நெறியை எதிர்மறையாக பாதித்த  அனர்த்தங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அடுத்த ஆங்கில மேதை 1977  - 1988 காலப் பிரிவில் நாட்டை ஆண்ட ஜே.ஆர்.  ஜயவர்தன. ஆங்கிலத்தில் சிந்தித்து,  சிங்களத்தில் பேசியவர். 1981 யாழ் நூலகம் எரிப்பு மற்றும் 1983 ஜூலை கலவரம் போன்ற  இலங்கை வரலாற்றின் கறை படிந்த அத்தியாயங்களை  தனது பெருமை மிகு 'Legacy '  ஆக விட்டுச் சென்றிருப்பவர்.

1983 ஜூலை 23 ஆம் திகதி தொடக்கம் 06 நாட்கள் இலங்கையில் நிகழ்ந்த வரலாறு காணாத கொடூரங்களை  மௌனமாக பார்த்துக் கொண்டிருந்து விட்டு, 28 ஆம்  திகதி மாலை  அரச தொலைக்காட்சியில் தோன்றி எந்தவித  குற்ற உணர்ச்சியுமில்லாமல்  'இலங்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது' என்ற பொருளை உணர்த்தும் தொனியில் பூடகமாகப் பேசி, வன்மத்தை  கக்கியவர்.

பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆங்கில மொழியைப் போதித்த ஆசான் சக்வித்தி ரணசிங்க  இறுதியில் எங்கு போய் நின்றார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஆகவே, ஆங்கிலம் ஏனைய மொழிகளைப் போலவே ஒரு தொடர்பு ஊடகம் மட்டும்தான். தெரிந்து வைத்திருந்தால் நல்லது; தெரியா விட்டாலும் எந்தப் பிரச்சினையுமில்லை. நல்ல தொழில் தேர்ச்சியுடன் கூடிய உரைபெயர்ப்பாளர்  ஒருவரின்  உதவியுடன் அத்தடையை அனாயாசமாக கடந்த சென்றுவிட முடியும். 

ஐரோப்பிய நாடுகளிலும், (ஆங்கில மொழிக்கு  முக்கியத்துவம் எதுவுமில்லாத) பல கிழக்காசிய நாடுகளிலும் அரச தலைவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உரை பெயர்ப்பாளர்களுக்கூடாகவே வெளியுலகத் தொடர்புகளை பராமரித்து வருகின்றார்கள். இராஜ தந்திர வட்டாரங்களிலும் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு  நடைமுறை இதுவாகும். 

இப்பின்னணியில், அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் தனது பணிகளை யெவ்வனே முன்னெடுப்பதற்கும், வெளியுலகத்துடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கும் மொழி அவருக்கு  ஒருபோதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இடையூறாக இருந்து வர முடியாது.

ஆட்சி மாற்றத்தின் வடிவில் 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்திருக்கும் சமூகப் புரட்சி, நமது அடிமைப் புத்தியையும், தாழ்வுச் சிக்கலையும் விட்டொழித்து, தன்மானத்துடனும், அதீத நம்பிக்கையுடனும்  எதிர்காலத்தை நோக்குவதற்கான ஒரு வரலாற்றுத் தருணமாக இருந்து  வருகின்றது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

எம்.எல்.எம். மன்ஸூர்


Post a Comment

0 Comments