Ticker

6/recent/ticker-posts

சஜித்தின் தோல்விக்கு ரணில் காரணமா? அவ்வாறு குற்றம் சுமத்துவது நியாயமா?

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி புதிய வெற்றிக் கூட்டணியை உருவாக்கிய சஜித் பிரமதாச ”வெல்லும் சஜித்“ என்ற தனது கோசத்திற்கு ஏற்ற வெற்றியை அடையாமல் 2019 இல் தவறவிட்டு 2024 ஜனாதிபதி தேர்தலிலும் தோல்வி கண்டார்.

இவ்வாறு 02 முறையும் சஜிதின் தோல்விக்கு ரணில்தான் காரணம் என்று  பழியை ரணிலில் போட்டுவிட்டு தாங்கள் இலகுவாக தப்பித்துக் கொள்வது போன்று சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை சஜித் தரப்பினர் பேசிக் கொள்வது எந்த விதத்தில் நியாயமானதாகும். 

தேர்தல் பிரசாரங்களில் மேடைக்கு மேடை ரணிலால் எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர் எதற்கும் இயலாதவராகி விட்டார் என்று அவரை முடிந்தவரை விமர்சித்து விட்டு, தேர்தல் முடிவடைந்து, தோற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்கவினால்தான் நாங்கள் தோற்றோம். ரணில் எங்களை தோற்கடித்து விட்டார் என்று நொண்டிச் சாட்டு சொல்லி பரிதாபம் தேடுவதானது எந்த வகையில் நியாயம்?

எதற்குமே இயலாத ரணிலால் எப்படி சஜிதை தோற்கடிக்க மட்டும் முடிகின்றது.  இவர்கள் கூறுவது போல் ரணில்தான் சஜிதை தோல்வியடையச் செய்தார் என்றால் இத்தகைய பலம் மிக்க ரணிலை விட்டு, எத்தகைய துணிச்சலுடன் சஜித் பிரிந்து வந்தார்.

ரணிலை எதிர்த்து நிற்க முடியும்; ரணிலை வெற்றி கொள்ள முடியும் என்ற துணிச்சலில்தானே சஜித் பிரேமதாச அவர்கள் ரணிலை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த துணிச்சலுடன் ரணிலுக்கு முன், தான் வெற்றி பெற்று  தனது தலைமைத்துவ ஆளுமையை சஜித் பிரேமதாச நிரூபித்திருக்க வேண்டுமே!

அவ்வாறு வெற்றி பெற முடியாமல் ஒவ்வொரு முறையும் தோல்வி கண்டு இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவைக் குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

இவர்கள் சொல்வது போல் ரணில்தான் சஜிதை தோல்வி காணச் செய்கிறார் என்பதுதான் உண்மை என்றாலும்கூட, இதில் என்ன தவறு இருக்கிறது? அரசியல் சதுரங்க விளையாட்டு என்பது இதுதானே! 

தனக்கெதிராக தனது கட்சியையும் தன்னோடு இருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு போன சஜித் எப்படியும் தோல்வி அடைய வேண்டும் என்றுதானே ரணில் செயல்படுவார். அவருடைய அரசியல் காய் நகர்த்தலும் அதுவாகத்தானே இருக்கும். அவருக்கு அதுதானே அரசியல் தர்மமும்கூட.

சஜித்தும் அவருடன் இருப்பவர்களும் ரணிலுக்கு பாடம் புகட்ட வரிந்து கட்டிக் கொண்டு அரசியல் போராட்டம் நடத்தலாம் என்றால், அப்பேற்பட்டவர்களுக்கு ரணில் பாடம் புகட்டக் கூடாதா?

உண்மையில், ரணில் ஜனாதிபதி வேட்பாளராகத் தோற்றாலும் தனக்குப் பாடம் புகட்டுவதற்கு புறப்பட்டவர்கள் அனைவருக்கும் தனது பாடத்தை நன்றாக புகட்டி வெற்றி கண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் என்பது இந்த நாகரிகத்தைத்தான் எல்லோரிடமும் விதைத்தும் இருக்கிறது.

இப்படி ரணில் தன்னை எப்படியும் தோல்வியடையச் செய்வார் என்பது 2019 இல் அனுபவ ரீதியாக புரிந்தால் இத்தேர்தலில் ரணிலை எதிர்க்காது அவருடன் இணைந்து  தனக்கான நிரந்தர அரசியல் அடித்தளத்தையும் சஜித் தரப்பினர் இட்டிருக்கலாமே! அதுதானே அரசியல் சாணக்கியம் என்பது. 

எதிரி யார் என்பதை சரியாக கணிப்பிடவும், நிர்ணயிக்கவும் தெரியாமல் ரணிலுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற ஈகோவை (Ego) மட்டும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவோடு சேரவும் கூடாது. ரணில் தன்னை வெல்லவும் விட மாட்டார் என்றால் இதன் அரசியல் வடிவம்தான் என்ன? 

ஆக, சஜித் பிரேமதாச தரப்பினர் ரணில் தங்களைத் தோற்கடித்து விட்டார் என்று சிறுபிள்ளை அரசியல் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியலில் அவர் தோற்கடிக்கத்தான் செய்வார். அதை முறியடித்து தாங்கள் எப்படியும் வெற்றி கொள்ள வேண்டும் என்றே தங்களுடைய அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்.

-நவாஸ் சௌபி -



Post a Comment

0 Comments