Ticker

6/recent/ticker-posts

தேர்தல் வெற்றியில் சமூக ஊடகங்களின் (Social Media) பங்கு.


இன்றிலிருந்து 46 வது நாளில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, இதிலும் சமூக ஊடகங்களின் பங்கு - வகிபாகம் (Role) மிகவும் முக்கியமான ஒன்றாக அமையப் போகிறது.

இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போது, AKD யின் முகநூல் 01 மில்லியன் பேரால் பின்தொடரப்படும் செய்தி வந்திருக்கிறது. தோழர் அநுரவை 'முகநூல் ஜனாதிபதி' என்று சிலர் கிண்டலடித்து வந்தார்கள்.

சமூக ஊடகங்கள் உருவாக்கும் 'மெய்நிகர் வெளிகளில்தான்' (Virtual World) அவர் செல்வாக்குச் செலுத்துகிறார். நடப்பு உலகில் அவருக்கு பெரிதாக ஆதரவு நிலவவில்லை என்பதே இவர்களது கணிப்பாகவும் - வாதமாகவும் இருந்தது.

ஆனால், தோழர் அனுர குமார திசாநாயக்கவுக்கு, 'Online - Offline' என்ற இரு வெளிகளிலும் - தளங்களிலும் கணிசமான ஆதரவு இருந்து வருகிறது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இதைப் பலரும் துல்லியமாகக் கணிக்கத் தவறியிருந்தனர். அதனால்தான் எனது உறுதியான கணிப்புகளையும் எதிர்வுகூறலையும், வழமைக்கு மாறாக தேர்தலுக்கு முன்னரே மிக அழுத்தம் திருத்தமாக- Assertive ஆக வெளியிட்டிருந்தேன்.

எது எவ்வாறாயினும், சமூக ஊடகங்கள் உருவாக்குகிற வாய்ப்புகள் மிக முக்கியமானவைஙாகும். நேர்நிலையான தாக்கம் (Positive Impacts) மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகள் (Negative Impacts) பல இதில் உள்ளன.

இருந்த போதிலும், சமூக ஊடகங்கள் தகவல்களை உடனுக்குடன் பரிமாறுவதற்கு மிகப்பெரும் வாய்ப்பினை பெற்றுத் தருகின்றன. இந்த வேகமான செய்திப் பரிமாற்றம் என்பது, அதன் சாதகத் தன்மையில் அடங்கியிருக்கும் மிக முக்கியமான காரணியாகும்.

அடுத்த சிறப்பம்சம், வாசகர்களும் இதில் பங்கேற்க (Engagement) முடிவது. அவர்களது கருத்துகளை உடனுக்குடன் Comment ஆக- பின்னூட்டமாக (Feedback)- வெளியிடுவதற்கு ஏதுவாக இருப்பது, விருப்பக் குறியீடுகளை அழுத்த முடிவது என்று இதில் பல சாதகமானதும் சுவாரசியமானதுமான அம்சங்கள் உள்ளன.

ஒரு வகையில் மிக வித்தியாசமான வலையமைப்பை (Networking) இது சாத்தியப்படுத்துகின்றது.

அதனால்தான் இலங்கை போன்ற நாடுகளில் Facebook, Instagram, Whatsapp, You tube போன்ற சமூக ஊடகங்கள் அதிகளவில் பாவனையில் உள்ளன.

ஒரு வகையான பிரஜை ஊடகவியல் (Citizen Journalism) இதன் மூலம் வளர்ந்து வருகின்றது. இது புதிய ஊடகம் (New Media) உருவாக்கித் தருகின்ற தனித்துவமான ஊடகப் பண்பாடாகும்.

தேர்தல் காலங்களில் எழுதப்படும் - பகிரப்படும் செய்திகள், பலராலும் நேரடி வாழ்வியல் தளத்துக்கு நகர்த்தப்படுகின்றன.

இணைய வெளிக்கு வெளியே வாழ்பவர்களிடம், இந்தத் தகவல்கள் பலராலும் எடுத்துச் செல்லப்படுகின்றது; உரையாடப்படுகின்றது; வாத - விவாதத்துக்கு உட்படுகின்றது.

சமூக ஊடகங்களின் இந்தத் தொழிநுட்ப பொறிமுறைச் சாத்தியங்கள், இலத்திரனியல் சாதனங்கள் என்ற தளத்தில் மட்டும் சுருங்கியிருக்கவில்லை. பல தளங்களை நோக்கி அவை விரிவு பெறுகின்றன என்பதே யதார்த்தமாகும்.

இளைஞர் - யுவதியர் அல்லது நடுத்தர வயதுடையவர்கள், தத்தம் நண்பர்களிடையேயும் குடும்ப உறுப்பினர்களிடையேயும் இச்செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் பல தலைமுறையினரிடையே இக்கருத்துகள் ஊடுபாவி நகர்கின்றன.

அதேபோன்று, வாசிப்போரின் மனதிலும் கருத்து மாற்றங்கள் நிகழ்கின்றன. பின்னர் அவை பரவுகின்ற இப்படியான தாக்கங்கள், செல்வாக்குகள் காரணமாகத்தான் அரசியல் சக்திகள், சமூக ஊடகங்களை நோக்கி தங்களது கவனத்தைக் குவித்துள்ளன. அதனைப் பெரும் சந்தைப்படுத்தல் கருவியாக (Marketing Tool) பார்க்கின்றன; பாவிக்கின்றன.

முன்னர் பத்திரிகை நிறுவனங்களைக் கொள்வனவு செய்து கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெரும் அரசியல் சக்திகள், பின்பு தொலைக்காட்சி அலைவரிசைகளை வாங்கினார்கள். 

ஜனாதிபதி வேட்பாளராக இருந்த திலித் ஜயவீர தெரண உட்பட தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகளின் உரிமையாளராக இருந்தும், ஒரு லட்சம் அளவுக்குத்தான் வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். சமூக ஊடகங்களின் அவசியத்தை இதுவும் குறிப்பால் உணர்த்துகின்றது.

இப்போது மக்களின் - குறிப்பாக இளம் தலைமுறையினரின் - கைகளிலுள்ள கையடக்கத் தொலைபேசி வழியாக - பெரும் சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

அதனால், சமூக ஊடகங்களில் சம்பளத்துக்கு எழுதும் கையாட்களை அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளார்கள். அவர்களுள் பலர் Fake ID கள் மூலம் போலிச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களது பணம் பாதாளம் வரைப் பாய்கின்றது.

இவ்வளவு சவால்களையும் தாண்டி, AKD சமூக ஊடகங்களின் Trending இல் தொடர்ந்தும்  முன்னிலையில் இருந்தார். இதுதான் அவரை மிகப்பெரிய வெற்றி வேட்பாளராக மாற்றியது.

ஒப்பீட்டளவில் இது செலவு குறைந்த வழிமுறை என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியில் சமூக ஊடகங்களின் பங்கு அளப்பரியது; 

எனது முகநூல் பதிவுகளும் - ஏன் இந்தப் பதிவு கூட, இந்த வகையில்தான் அடங்கும்.

இன்ஷா அல்லாஹ், பாராளுமன்றத் தேர்தலிலும் சமூக ஊடகங்களின் வகிபாகம் இதே போல தூக்கலாகவே இருக்கும். 

நாடாளுமன்றத்தில் - குறைந்தபட்சம் 113 என்ற எளிய பெரும்பான்மையைக் (Simple Majority) கைப்பற்றுவதற்கு, அது தன் பங்கையும் பணியையும் மிக உற்சாகமாகச் செய்யும். நாமும் அப்பணியில் ஓயாத பங்காளிகளாக இருப்போம்; இயங்குவோம்.

சிராஜ் மஷ்ஹூர்

Post a Comment

0 Comments