Ticker

6/recent/ticker-posts

புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பு.

 ஜம்மு - காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.


இப்பதவியேற்பு விழா ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று (16) காலை நடைபெற்றது. அவரை தொடர்ந்து 05 புதிய அமைச்சர்களும் பதிவியேற்றுக் கொண்டனர். 



நடந்து முடிந்த ஜம்மு - காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 06, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 01 என மொத்தம் 49 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கியுள்ளது. இதன் பிரகாரம், கட்சியின் புதிய M.L.A. க்கள் கூட்டம் கடந்த 10 ஆம் திகதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா நடாத்திய இக்கூட்டத்தில் அனைத்து புதிய MLA க்களும் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா என்பவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களும், MLA க்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும்.. அவருக்கு சுயேட்சை MLA க்கள் 04 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். இதனையடுத்து அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.



கடந்த 11 ஆம் திகதி துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்தார். அப்போது தனது கட்சி MLA க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்க துணை நிலை ஆளுனர் அழைப்பு விடுத்தார்.



குறித்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி, NCP சார்பில் சுப்ரியா சூலே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் தேசிய மாநாடு கட்சி உறுப்பினர்கள் என் பலரும் பங்கேற்றனர்.






Post a Comment

0 Comments