கடுமையான மழை காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கிணங்க, 338 குடும்பத்தைச் சேர்ந்த 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 க்கும் மேற்பட்ட வேளாண்மை நிலங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தினால் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (26) இரவு பெய்த கனமழை காரணமாக, அண்ணல் நகர், பைசல் நகர் மற்றும் மாஞ்சோலைசேனை போன்ற கிராமசேவகர் பிரிவுகளில் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மத்திய பகுதியில், இன்னும் ஓரிரண்ட நாட்களுக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில் மகாவலி கங்கை பெருக்கெடுக்ககூடிய ஆபத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மகாவலி கங்கை சங்கமிக்கின்ற கொட்டியாரக்குடா பகுதியை அண்டி காணப்படுகின்ற 03 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுப்படுகின்றது.
அது மட்டுமன்றி, கிண்ணியா - குறிஞ்சாகேணி பாலத்தின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால், குறித்த பாலத்தின் சில பகுதிகள் எந்நேரமும் இடிந்து விடக்கூடிய ஆபத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
TO JOIN WITH US:
0 Comments