தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால், தேங்காய் ஒன்றின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.
இதன்படி, சந்தையில் தேங்காயொன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. அத்தோடு, சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், மக்கள் அதிகமாக உட்கொள்ளும் நாட்டு அரிசி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, சில்லறை அரிசி விற்பனைக்காக அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விடவும், அரிசியின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதேவேளை, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை திருத்துவதற்கும் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட 30 ரூபாய் விஷேட வர்த்தக வரியை 10 ரூபாவாக குறைப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குக்கான 60 ரூபாய் விஷேட வர்த்தக வரியை தொடர்ந்தும் பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில், வானிலை மற்றும் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும், இதன் விலை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இப்புதிய வரி திருத்தம் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments