Ticker

6/recent/ticker-posts

ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்.

காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த வருடம் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.



மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதனையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.



அதேபோன்று, ஹமாஸ் ஆயுதக் குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



பணயக் கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர். பணயக் கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இதேவேளை, தங்கள் வசமுள்ள பணயக் கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது தெரிவித்துள்ளது.



இதனிடையே, இப்போரில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 44,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்கு கரையில் ஏற்பட்ட மோதலில் 700 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 


ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காஸாவில் போரை நிறுத்த வேண்டுமென்று இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அழித்து, பணயக் கைதிகளை மீட்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், பணயக் கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாஸுக்கு டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துளார்.



தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக 2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.



ஜனாதிபதியாக தான் பதவியேற்கும் தினத்திற்கு முன்னர் பணயக் கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு பணயக் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்றும் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



'நான் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் பணயக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால், அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் குழுவினர்) மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்' என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments