சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் 6 மத்ரஸா மாணவர்கள் உட்பட 8 பேரின் உயிர்களை காவு கொண்டமை முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இனியும் இவ்வாறான அனர்த்தங்களின் மூலம் உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக நீதிக் கட்சி, மாவடிப்பள்ளி பிரதேசம் உள்ளடங்கும் காரைதீவு பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு 10 பாதுகாப்பு மேலங்கிகளை (life Jackets) வழங்கி வைத்தது.
இந்நிகழ்வில் சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்க்கம் முனீர், தலைமைத்துவ சபை உறுப்பினர் இர்பான் பன்னா, கட்சியின் உறுப்பினர் ராகுல் ஸஜீத், கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ், நாவிதன்வெளி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்
ஏ.எல்.எம். ஷினாஸ், மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் மீட்கப்பட்ட இளைஞர் ரபா ஆகியோர் கலந்துகொண்டு இப் பாதுகாப்பு மேலங்கிகளை காரைதீவு பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு சார்பில் கலந்துகொண்ட உத்தியோகத்தர் A. ஜெஸ்மீரிடம் கையளித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்க்கம் முனீர் "மாவடிப்பள்ளி அனர்த்தம் குறித்து அரசாங்கம் தனது போதிய கவனத்தை செலுத்தாமை கவலை அளிக்கிறது. இந்த வெள்ளத்தினால் பாரிய சேதங்கள் ஏற்படலாம், உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று போதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அரச நிர்வாகம் துரிதமாக செயற்படாமை சேதங்களை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
எது எப்படி இருப்பினும், இனி அரசாங்கம் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை, தமது நேசத்திற்குரியவர்களை இழந்து தவிக்கும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த குடும்பங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முறையான நஷ்ட ஈட்டை வழங்கி அவர்களது எதிர்காலத்தை உறுதிசெய்தலாகும்.
அதுமட்டுமல்லாது உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் நீதி, இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.
அந்த வகையில் சமூக நீதிக் கட்சியானது, மாவடிப்பள்ளி பிரதேசம் உள்ளடங்கும் காரைதீவு பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு 10 பாதுகாப்பு மேலங்கிகளை (life Jackets) இன்று வழங்கி வைத்து அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தது. நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்த வெள்ள அனர்த்தத்தின் மூலம் பெற்றுக்கொண்ட படிப்பினைகளை வைத்து கரையோரப் பிரதேசங்கள் உட்பட நாட்டில் வழமையாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரதேசங்கள் உட்படும் பிரதேச செயலகங்களின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கு போதிய பாதுகாப்பு மேலங்கிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்து பலப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது இவ்வாறான அனர்த்தங்களின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய, மக்களின் போக்குவரத்துக்களை, குறிப்பாக பாலங்களில் மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளும் போக்குவரத்துக்களை தற்காலிகமாக நிறுத்தி வீதிகளை மூடுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய ஒழுக்கக்கோவையை தயார் செய்து வழங்கல் வேண்டும். அத்தோடு ஒரு அனர்த்தம் ஏற்படும் போது பொதுமக்கள் குறித்த பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவை தொடர்புகொள்வது குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இனியும் ஒரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு மீண்டும் இவ்வாறான விடயங்கள் பேசுபொருளாக மாறும் வரை காத்திருக்காமல் அரசாங்கம் உடனடியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
புகைப்படங்கள்: ஊடகவியலாளர் முஜீப்
0 Comments