காத்தான்குடி மத்திய கல்லூரியில் 2024 கல்வியாண்டுக்கான GCE (O/L) பரீட்சையில் இன்று செவ்வாய்க்கிழமை (18) தமிழ்ப் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி 01 மணித்தியாலமும் 40 நிமிடங்கள் கால அவகாசம் இருந்தும் அவை மறுக்கப்பட்டு விடைத்தாள்களை பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் பெறப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க தவறியுள்ளதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் 02 பரீட்சை மண்டபங்களில் பரீட்சைகள் நடைபெற்ற போதிலும் ஒரு மண்டபத்திலே குறித்த அநீதி இடம் பெற்றுள்ளது.
குறித்த செயற்பாட்டினால், மாணவர்கள் தங்களுடைய புள்ளிகள் மற்றும் பெறுபேறுகள் குறைவடையலாம் என்றும் தமிழ் மொழி பாடமானது மிக முக்கியமானது என்றும், தங்களுடைய எதிர்காலம் இதனால் பாதிப்படையலாம் என்றும், முழுமையாக புள்ளிகளை வழங்குவதன் மூலமாக இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்று இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோரும் மாணவர்களும் நீதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments